முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Saturday, December 8, 2018

திருமணஞ்சேரி.

 திருமணஞ்சேரி.

Picture
திருமணஞ்சேரி
மூலவர்:உத்வாகநாதர்.
அம்மன்:கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை தீர்த்தம்:சப்தசாகரம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:மணஞ்சேரி, கீழைத் திருமணஞ்சேரி  ஊர்:திருமணஞ்சேரி மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு.




பாடியவர்கள்: தேவாரப்பதிகம்
அப்பர், சம்பந்தர்
விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.     

திருவிழா:    
சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாட்களில் ஊரே மணக்கோலத்துடன் காட்சி தரும். ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.   

தல சிறப்பு:    
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.    

திறக்கும் நேரம்:    
காலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.    

முகவரி:    
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம்.    போன்:    +91 - 4364 - 235 002     

பொது தகவல்:    
இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.     பிரார்த்தனை    திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.

பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.   

நேர்த்திக்கடன்:   
திருமண வரம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து கல்யாணசுந்தரருக்கு கல்யாணஅர்ச்சனை செய்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டருளியுள்ள ராகு பகவானுக்குப் பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டால் ராகு தோசம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள்.சனீசுவரனுக்கு எள் தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றுகிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.    

தலபெருமை:   
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது. பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து அறிவிக்கிறார்.

இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.

குழந்தை வரம் : 
அம்மாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர்.

குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வளரி போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.

காமன் சாபம் நீங்கப் பெற்ற தலம் : 
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.

இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: 
தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.

தல வரலாறு:   
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.

ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.    சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.