முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Friday, December 14, 2018

சுற்றுலா மையங்கள் - – தமிழ்நாடு

சுற்றுலா மையங்கள் -  – தமிழ்நாடு



      இந்தியாவுக்கு சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணி வரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டின் முதல் ஆறு மாதம் மட்டும் இந்தியாவுக்கு 1.2 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் 1.75 பில்லியன் டாலர் வருமானமும் கிடைத்துள்ளது.

  இந்தியச் சுற்றுலா என்றாலே எவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தாஜ்மகால்தான். உலக அதிசயமான தாஜ்மகால் 1631 வருடம் தொடங்கி 22 ஆண்டுகள் இருபதாயிரம் பணியாளர்களைக் கொண்டு ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் ஷாஜகான் என்ற முகலாய்ப் பேரரசரால் இறந்துபோன மும்தாஜ் என்ற தன் காதல் மனைவிக்காகக் கட்டப்பட்டது. உலகின் உன்னத காதல் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மகால் உலக அதிசயம் என்று மீண்டும் 2007ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 7 புதிய உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள அறக்கட்டளை ஒன்று உலகம் முழுவதும் நடத்திய வாக்கெடுப்பின் இறுதியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடந்தது. தேர்வான புதிய உலக அதிசயங்களுள் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது, இந்தியாவின் தாஜ்மகால்தான்.
  
டெல்லியின் முதல் முஸ்லிம் பேரரசரான குதுப்புத்தின் அய்பக் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சித் துவக்க அடையாளமாக 1200ம் ஆண்டு கட்டத்துவங்கிய 238 அடி உயரம் 47 அடி அகளம் கொண்ட குதுப் மினார், ஷாஜகான் பேரரசரால் 1618ம் ஆண்டு கட்டப்பட்ட செங்கோட்டை, முதல் உலக யுத்தத்தில் பலியான இந்திய ராணுவத்தினருக்கு அஞ்சலியாக கட்டப்பட்ட இந்திய நுழைவாயில், இந்திய குடியரசுத் தலைவரின் அரசாங்க இருப்பிடமான ராஸ்டிரபதிபவன் போன்று பல சுற்றுலா ஈர்ப்புகள் டெல்லியில் உள்ளன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஒரு கலாச்சார செழுமை மிகுந்த இடமாகும். யானைகள், ஒட்டகங்கள், பறவைகள் சரணாலயங்கள், திருவிழாக்கள், கோட்டைகள், சொகுசு ரயில்கள், கிராமிய நடனங்கள், கிராமிய இசை, கலைப்பொருட்கள் என்று இங்கே காணக்கூடியவை ஏராளம்.

இயற்கை அழகு கொஞ்சம் கேரளா, கோட்டை, அணை, கோவில், கடற்கரை, வனவிலங்கு என்று பலவும் கொண்ட ஆந்திரா, மைசூர் அரன்மனை பிருந்தாவனம் போன்ற சிறப்புகளைக்கொண்ட கர்னாநாடகம், கடற்கரைக்குப் புகழ்வாய்ந்த கோவா, சீக்கியப் பொற்கோவில் உள்ள பஞ்சாப், கஜுராஹோ சிற்பங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசம் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுற்றுலா சென்று அனுபவைக்க உகந்த இடங்களாய் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கென்று பல இடங்கள் உள்ளன. இந்தியாவில் முதலில் உருவான பெரு நகரம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைதான். 1996 வரை மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையை எடுத்துக்கொண்டால், முதலில் ஞாபகம் வருவது அதன் அழகிய நீண்ட மெரினா கடற்கரை. மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை இதுதான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த 1330 குறள்களைத் தந்த திருவள்ளுவருக்கு 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், பழந்தமிழ் கட்டிடக் கலை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள், மாதாகோவில்கள், வனவிலங்குசாலை, நூலகங்கள் என்று பல சுற்றுலா இடங்கள் சென்னையில் உள்ளன.

சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் வடக்கில் மாமல்லபுரம் என்னும் 7ஆம் நூற்றாண்டின் பல்லவ நாட்டு முக்கிய துறைமுகமான மகாபலிபுரம் உள்ளது. இதன் அழகிய கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க பேரழகு பல்லவ சிற்பங்களும், உலகப்பகழ் பெற்ற கடற்கரைக் கோவில்களும் சுற்றுலாப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்று மதுரை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் உண்டு. 1560ல் கட்டப்பட்ட ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம் தட்டும்போது ஒவ்வொரு வகையான ஒலியை எழுப்பக்கூடிய மாதிரித் தூண்கள் சிலவற்றைக் கொண்டது.

சோழர்களின் தலைநகரமாய் விளங்கிய தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ் வாய்ந்த பிரகதீஸ்வரர் கோயிலும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தியும் இங்குதான் இருக்கின்றன. தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்று. கி.பி. 1400 சோழர்கள் காலத்தில் தோன்றி, நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.

நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மனோரா என்ற ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள பேராவூரணி அருகில் உள்ளது.

சித்தன்னவாசல், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குகை ஓவியத்திற்குப் புகழ் மிக்க ஊர். இவ்வூரில் உள்ள கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது.

திருச்சி என்னும் திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கியமான நகரங்களில் ஒன்று. இதன் மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது காவிரியின் தென்கரையில் கம்பீரமாக அமைந்துள்ள மலைக்கோட்டையாகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது.

மலைவாசத்தலங்களின் அரசி என்று அழைக்கப்படும் உதகை என்னும் உதகமண்டலம், தாவரவியல் பூங்கா, ஏரி, தொட்டபெட்டா மலைச் சிகரம், முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பூங்கா, கல்லட்டி நீர் வீழ்ச்சி, ஊட்டி, கோத்தகிரி, குன்னுர் என்று பல கோடை வாழிடங்களையும் கவர்ச்சிகளையும் கொண்ட சுற்றுலாச் சொர்க்கமாகும். உதகையில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் சுமார் 50 வகையான அரிய மலர்களைக் கொண்ட கண்காட்சி நடைபெறும்.

வென்லாக் சமவெளி என்பது உதகை-மைசூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. சுமார் 40 சதுரமைல் பரப்புள்ளது. இதைப் போன்றதொரு இயற்கை அழகு நிறைந்த இடத்தை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது.

அடர்ந்த வானாந்திரங்களும், பச்சை மலைத்தொடரும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமியான குற்றாலம் தென்னாட்டின் மூலிகைக் குளியலறை என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் நதியாக உருவெடுத்து, வனாந்திரங்கள், மலையிடுக்குகள், மரத்தடிகள், மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் சரிந்து 9 அருவிகளாக குளிர்விக்கின்றன. ஜூன் மாதம் தொடங்கும் சாரல் ஆகஸ்டு இறுதி வரை தொடரும். 2000 வகையான மலர்களையும், செடிகளையும் இந்த மலைகளில் காணலாம்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பல வன விலங்குகளையும் அடர்ந்த காடுகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏரிகள் போன்றவன்றை உள்ளடக்கிய இந்த மலைச்சிகரம் தானியங்கள், பழத்தோட்டங்கள், ஊசியிலை மரங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளைக் கொண்டது.

இராமேஸ்வரம் வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய வழிபாட்டு இடம் என்பதால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கன்னியாகுமரி இந்தியாவின் தென்முனையில் உள்ளது. இந்திய நிலப்பரப்பை வர்ணிக்கும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொல்வது வழக்கம். வங்காளவிரிகுடா, இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் முக்கடல் முனையும் இதுதான். சூரிய உதயத்தையும் மறைவையும் இம்முனையில் காணலாம். இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் காமராஜர் நினைவாலயம் ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது.

சித்திரை முழுநிலவில் நிலவும் சூரியனும் நேர்கொள்ளும் அழகைக் காணக் கண்கோடி போதாது. சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே சமயத்தில் இங்கே காணமுடியும்.

திருக்குறளை இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல்பரப்பில் அமைந்துள்ள பாறை ஒன்றில் திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையை தமிழக அரசு அமைத்துள்ளது. சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம். பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறையில் 1970ல் விவேகானந்தர் நினைவாலயம் அமைக்கப்பட்டது. விவேகானந்தர் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.

மேலும் கன்னியாகுமரியில் காமராஜர் நினைவு மண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான காமராஜர், அரசியல் தலைவர்களை உருவாக்குவதில் வல்லவர்.

கன்னியாகுமரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டம் என்ற அழகிய கடற்கரை கிராமத்தின் அழகியலை பல தமிழ்த் திரைப்படங்கள் படம் பிடித்திருக்கின்றன. பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை. பழமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும் கலங்கரை விளக்கமும் உள்ள முட்டம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவதில் ஐயமே இல்லை.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.