முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Saturday, December 8, 2018

நீதிவெண்பா

                        நீதிவெண்பா


                                                          
பிற்கால தமிழிலக்கிய வரிசையில் "நீதிவெண்பா" எனும் நூலும் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. சம்ஸ்கிருத மொழியிலுள்ள நீதி சாஸ்திரங்களை வெண்பாக்களாகப் பாடிவைத்திருக்கும் இந்நூலில் 100 பாடல்கள் இருக்கின்றன. ஒருக்கால் இவை சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பாகக் கூட இருக்கலாம். மிகவும் எளிமையான இந்த நூலிலிருந்து சுவாரசியமான ஒருசில பாடல்களை அதன் கருத்துரையோடு தந்திருக்கிறேன். பயனுள்ளதாக இருக்குமானால் மகிழ்ச்சி. இலக்கியக் கூட்டங்கள், ஆசிரியர்கள் இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகப் பயன்படக் கூடிய அவசியமான கருத்துக்கள் இந்தப் பாடல்களில் உண்டு. படித்தபின் கருத்துக்களையும் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

1. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில் எவர் எந்த குடியில் பிறந்திருந்த போதிலும் நல்லவர்கள், இவர், இன்னார் என்று பாராமல் எல்லா குடிகளிலும் வந்து பிறப்பர் என்பது இந்தப் பாடலின் கருத்து. தாமரை மலர் சேற்றில் மலர்கிறது; தங்கம் (பொன்) பூமிக்கடியில் இருண்ட சுரங்கங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது; ஒளிவீசும் முத்து கடலில் வாழும் சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கிறது; சாமரம் வீசுகிறார்கள் அல்லவா அந்தக் கால மன்னர்களுக்கு விசிறி போல, அந்தத் தோகை ஒரு வகை மானின் உடலில் வளர்ந்த மயிர்; கோரோசனை என்பது ஒருவகை பசுவின் வயிற்றில் கிடைக்கிறது; நாம் அருந்துகின்ற பால் பசுவின் உடலில் உற்பத்தியாகி அதன் மடியின் மூலம் கிடைக்கிறது; இனிமையான தேன் தேனீக்களால் எச்சில் படுத்தி உறிஞ்சப்பட்டு கூடுகளில் சேகரித்ததை நாம் அபகரித்துக் கொள்கிறோம்; நாம் அணியும் பட்டு, பீதாம்பரங்கள் பட்டுப்பூச்சி உருவாக்கிய கூட்டிலிருந்து கிடைக்கிறது; இறைவனின் பூசைக்கு உகந்த புனுகு என்பதும், ஜவ்வாதும் ஒரு வகைப் பூனையின் கழிவிலிருந்து கிடைக்கிறது. தீ எதிலிருந்து எழுந்தால் என்ன? தீ தீதான் அல்லவா? மேற்படி பொருட்கள் எப்படிப்பட்ட இழிவான இடத்தில் தோன்றியிருந்தாலும் அதனுடைய பெருமை மட்டும் குறைவதில்லை அல்லவா? இதை விளக்கும் இந்தப் பாடல்.

தாமரை பொன் முத்துச் சவரம் கோரோசனை பால்
பூமருதேன் பட்டுப் புனுகு சவ்வாது - ஆமழல்மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே; நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்?

2. 'அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்' என்பது தமிழ் வேதம். மூங்கில் வளரும் போதே அது நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் வளருமானால் அதனை எந்த வகையிலும் வளைத்துப் பயன்படுத்தலாம். அரசனுடைய சிம்மாசனத்துக்கு மேல் விதானமாக அப்படிப்பட்ட மூங்கில் பயன்படும். ஆனால் அப்படி வளையாமல் நிமிர்ந்து உறுதியாய் விளையுமானால் அது கழைக்கூத்தாடிகளின் கையில் பயன்படும் வித்தைக் கோலாகத்தான் பயன்படும். ஒன்று மேன்மையையும், மற்றது தாழ்ந்தும் போகக் காரணம் அவற்றின் வளர்ச்சி முறை. உடல் வருத்தி வளைந்து கொடுத்துப் போனால் உயர்வும் பெறுவர். அப்படி உடல் வருத்தாமல் உழைக்காமல் நின்றால் அவர்கள் கீழ்மை அடைவர் என்பது கூற்று.

வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்;
வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதின்யெல்லா ந்திரிந்து
தாழும் அவர் தம்மடிக்கிழ்த் தான்!

3. சிலர் கிடைத்த போதெல்லாம் வயிறு புடைக்க உண்பர். சிலர் விரதம், நோன்பு என்று உடலை வருத்தி அளவோடும், காலத்தோடும் உண்பர். இப்படி பல வகையாக உண்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகியாம். இரு வேளை உண்பவன் போகியாம். மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க உண்டு களிப்பவன் ரோகியாம். நான்கு வேளையும் உண்பதே வேலையாக இருப்பவனுடைய உயிர் உடலைவிட்டு விரைவில் போய்விடும் என்பதை அறிக! இதுதான் இந்தப் பாட்டின் கருத்து.

ஒருபோது யோகியே; ஒண்தளிர்க்கை மாதே!
இருபோது போகியே; என்ப - திரிபோது
ரோகியே; நான்கு போது உண்பான் உடல்விட்டுப்
போகியே என்று புகல்.

4. ஒரு சிலரைப் பார்த்து 'இவனுக்குப் நாக்கில் விஷம்' என்பார்கள். அவன் பேச்சு அப்படி விஷம் போல பாய்ந்து துன்பம் தருமாம். பாம்பைப் போல கொடியவன் அவன். யார் யாருக்கு எங்கு விஷம் என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லதுதானே! பார்ப்போம். ஈ இருக்கிறதே மிக அற்பமான ஜந்து, அதற்கு தலையில் விஷம் சேர்ந்திருக்கும். தேளுக்கு கொடுக்கில் விஷம்; பளபளக்கும் பாம்புக்குப் பல்லில் விஷம்; ஆனால் தீய நோக்கங்களும் நடத்தையுமுடைய தீய மனிதர்க்கு உடல் முழுதும் விஷம். எப்படி?

ஈக்கு விடந்தலையில் எய்தும்; இருந் தேளுக்கு
வாய்த்த விடங்கொடுக்கில் வாய்க்குமே - நோக்கரிய
பைங்கண் அரவுக்குவிடம் பல்அளவே; துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம்.

5. இப்போதெல்லாம் சாலையில் வரும் வாகங்களைக் கண்டு காததூரம் ஓடி ஒதுங்க வேண்டியிருக்கிறது. நாம் ஒழுங்காக வாகனங்களிலோ, நடந்தோ போனாலும், கண்மூடித் தனமாக தலைபோகிற வேகத்தில் இருசக்கர வாகங்களை ஓட்டிக் கொண்டு வரும் விடலைகளைப் பார்த்து அஞ்சி ஓடவேண்டியிருக்கிறது. சரி! இனி யாருடம் எத்தனை தூரம் ஒதுங்கிப் போகவேண்டும் என்பதைப் பார்க்கலாம். கொம்பு உள்ள கால்நடைகளான மாடு, ஆடு, மான் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்ள ஐந்து முழம் தள்ளிப் போக வேண்டும். குதிரையிடமிருந்து பத்து முழம் தள்ளிப் போய்விட வேண்டும். மதங்கொள்ளக்கூடிய யானையிடமிருந்து ஆயிரம் முழம் ஒதுங்கி ஓடிவிட வேண்டும். ஆனால் நம்மைப் போலவே மனிதர்களா உருவிலும், உள்ளத்தால் வஞ்சனையும் சூதும் மேலோங்கி நிற்கும் மானுடவர்க்கத்திடமிருந்து கண்காணாத தூரம் போய்விடுவதே நன்று.

 கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்க்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
வீங்க்குவதே நல்ல நெறி.      

6. 'ஈயத்தை வெள்ளியாக்கலாமா?' அல்லது 'செம்பைப் பொன்னாக்கலாமா?' கெட்ட மனிதனை நல்லவனாக ஆக்க முடியுமா? முயன்றுதான் பாருங்களேன். ஆனால் அனுபவம் என்ன சொல்லுகிறது தெரியுமா? படியுங்கள். தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோமே உள்ளிப்பூண்டு, அதன் வீச்சம், நாற்றம் அல்லது மணம் அது ஒரு வித நெடியுள்ளது. அதை மாற்றி நல்ல நறுமணம் கொண்டதாக ஆக்குவதற்காக உடலுக்கு பீச்சியடித்துக் கொள்கிறார்களே நறுமண திரவம் அதை அடித்தாலும் அதன் தனித்தன்மை வாந்த நெடி மாறிவிடுமா என்ன? மாறாது அல்லவா? அது போலத்தான் பொறாமையும், நன்மை தீமை அறியாத தீமை குணங்கள் நிறைந்தவனை நல்லவனாக மாற்றிட முடியாது என்கிறது இந்தப் பாடல்.

அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ? - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ? கரை.

7. ஒரு நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும்? அவரவர் மனதுக்குத் தோன்றியபடி தங்கள் வேட்கையைத் தெரிவிப்பார்கள். ஆனால் சாத்திரம் என்ன சொல்கிறது என்பதைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து நல்ல அனுபவமும், ஆராய்ச்சியும் செய்து தேர்ந்த அறிஞர் பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒரு மனைவி கணவனிடம் தாயைப் போல கருணையும், பணிப்பெண்ணுக்குரிய பணிவும் அடக்கமும் சீலமும், ஓவியர்மணி ரவிவர்மா வரைந்த மகாலட்சுமி படங்களைப் பார்க்கிறோமல்லவா அதைப் போல வசீகரமான அழகும், பூமியைப் போல, அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமையைக் கடைப்பிடித்தும், கட்டிலில் இன்பத்தை அள்ளி அள்ளித் தரும் ஒரு விலைமாதைப் போலும் அவள் விளங்க வேண்டுமாம். ஆலோசனை சொல்வதில் ஒரு மந்திரி போல இருக்கவேண்டும். எனக்குத் தெரியவில்லை, யாரோ சொன்னதை இங்கு எடுத்துச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வண்ணமுலை
வேசி துயிலும் விறல்மந்திரி மதியும்
பேசில் இவைஉடையாள் பெண்.

8. சத்தமாகப் பேசி, கூச்சலிட்டு, ஊர் அதிரும்படியாக அதிர்வேட்டுச் சிரிப்பை உதிர்க்கும் சில பெண்களைப் பார்த்து வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்வார்கள் 'அடக்கமாக இரு' என்று. என்ன பொருள்? அப்படி தன்னடக்கம் இல்லாமல் ஒரு பெண் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பர்கள் என்று கருதாமல் கத்திப் பேசுவதும், இடிச்சிரிப்பு சிரிப்பதுமாக இருந்தால் இந்த பூமி அதிருமாம். அவளைப் போலவே இன்னொரு பெண்ணும் சேர்ந்துவிட்டாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் பேசினால் வானத்து விண்மீன்கள் எல்லாம் பொலபொலவென உதிர்ந்து போய்விடுமாம். அவர்களே மூன்று பேராக இருந்தால் கடலில் வீசும் அலைகள் ஒய்ந்து கடல் நீரும் வற்றிப் போய்விடுமாம். ஒருக்கால் இவளைப் போல பல பெண்கள் பேசினால் என்னவாகும் இந்த உலகம்? என வியந்து கேட்கிறார் இந்தப் பாடலின் ஆசிரியர். நான் இல்லை; தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்.

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள் - பெண்மூவர்
பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்!

9. 'உருவம் கண்டு இகழாமை வேண்டும்'. எந்த தோற்றத்தில் மாமேதைகள் இருப்பர் என்று யார் அறிவார்? ஒரு ஊரில் ஐந்து பேர் சேர்ந்து கட்டிய திரையரங்கம் அவர்களுக்குள் வேற்றுமை ஏற்பட்டதால் வழக்கு உயர்நீதிமன்றம் சென்று அவர்கள் ஆணைப்படி அந்த அரங்கம் ரிசீவர் முன்னிலையில் ஏலத்துக்கு வந்தது. ஏலம் கேட்க பலர் வந்திருந்தனர். அவர்களில் உயர்ந்த தொகைக்கு ஒருவர் கேட்டார். அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கவில்லை. உடல் பருமனாக முழங்கால் வரை கட்டிய வேட்டியும், மேலே சட்டை இல்லாமல், கருத்த மேனியில் தோளில் ஒரு துண்டும் அணிந்திருந்தார். அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விட்டது. ரகசியமாக அவர் யார் என்று விசாரித்தனர். அவர் அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய மொத்த வணிக முதலாளி, பல வர்த்தக நிறுவனங்களுக்கு அதிபர் என்று தெரிய வந்தது. இறுதியில் அவர்தான் அந்த அரங்கத்தை ஏலத்தில் எடுத்துப் பின்னர் பலகாலம் நிர்வாகியை அமர்த்தி அரங்கை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இதை எதற்காகச் சொல்கிறே என்றால் எவருடைய தோற்றத்தையும் கண்டு இகழாமல் இருத்தல் நன்று. கடல் உப்பு பார்ப்பதற்கு கற்பூரம் போலத்தான் இருக்கிறது, அது கற்பூரமாகி விடுமா? அதுபோல அற்பர்கள் தவசிகள் போலவும், நல்லவர்கள் போலவும் வேடமிட்டாலும் நல்லவர் ஆகிவிடுவாரா?

கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும்
கற்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ புகல்?

10. 'நிறை குடம் தளும்பாது' என்பர். முற்றும் கற்றுணர்ந்தவன் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பான். மூடன் ஒன்றுமில்லாததையெல்லாம் ஆகா ஓகோ என்று பேசிக் கொண்டு அலட்டித் திரிவான். மேலோர் அமைதி காப்பர், அற்பர்கள் எதைவேண்டுமானாலும் கூசாமல் பேசுவர். இது எதைப் போல என்றால், வெண்கலத்தைத் தட்டினால் கணீரென்று ஓசை எழுப்பும், விலை உயர்ந்த தங்கத்தைத் தட்டினால் அப்படிப்பட்ட ஓசை எழுமா, எழாது அல்லவா? அதனால்தான் சிவபெருமான் திருஞானசம்பந்த மூர்த்திக்குக் கொடுத்த பொற்தாளத்துக்கு ஓசையைத் தனியாக வழங்கி அருள் புரிந்தாராம். ஓசை ஒலியெலாம் ஆனவன் அல்லவா அந்த சிவபெருமான்.

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்; ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே; விரிபசும்பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி?

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.