ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு
முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.
மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.
யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம்.
தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.
முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள். அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)
இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)
சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல. ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.
தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன. இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.
“முருகன் வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர். முருகன் வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருகன் வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.
ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருகன் வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.
யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை "பிர்" என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர். அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை "கவ்வல்" என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் "கவ்வாலிகள்" ஆவர்.
இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் "காவாலி" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர்.
ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை. குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர். யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.
அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர்.
அலெக்சாண்டரின் காலத்திலேயே, ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன. ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.
யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது. ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.
உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 - 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா "யாசிட்" இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.
அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது. இன்றைய லெபனானில் பிறந்த "அடி பின் முஸாபர்" (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார். அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.
ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.
இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை. ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை.
19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர். அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.
2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.
அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி - இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர்.
யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.
ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர். யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.
துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன. அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.
வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர். தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர்.
யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.