திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
அமைவிடம்
இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7வது தலம் ஆகும்.
தல வரலாறு
கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
இறைவன் - யூதிகா பரமேஸ்வரர், முல்லைவனேஸ்வரர், முல்லை வனநாதர்.
இறைவி - சத்யானந்த சௌந்தரி, கோதையம்மை.
தலமரம் - முல்லை.
தீர்த்தம் - சக்கர தீர்த்தம், கோயிலின் பக்கத்தில் உள்ளது. இந்திரனும், கார்க்கோடனும் வழிபட்ட தலம்.
சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில். கிழக்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரமில்லை. உள்நுழைந்தால் வெளிச்சுற்றில் உள்ள கிளுவை பத்திர மரத்தில் தலமரமான முல்லைக் கொடி சுற்றியவாறு படர்ந்துள்ளது. கற்பக விநாயகர், விஷ்ணு க்ஷேத்திரலிங்கம், பாலசுப்பிரமணியர் இலக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் அழகான திருமேனி. அடுத்து நவக்கிரக சந்நிதி. வலம் முடித்துப் படிகளேறினால் முல்லை வனநாதர் சந்நிதி - நேரே மூலவர் தரிசனம். மூர்த்தி சுயம்புத் திருமேனி. பாணத்தில் இருவெட்டுத் தழும்புகள் உள்ளன.
இத்தலத்திற்கு வடுகநாத தேசிகர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறும் இக் கோயிலின் பெருவிழா மாசி மகத்தன்று ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. தைப்பூச நாளில் நூற்றெட்டு காவடிகள் எடுப்பது இங்கு விசேஷமானது. பக்கத்தில் குருகாவூர் தலம் உள்ளது.
"நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனியரனூர்
மஞ்சாரு மாட மனைதோறு மைய
முளதென்றுவைகி வரினுஞ்
செஞ்சொலி நெல்லின் வளர் சோறளிக்கொ
டிருமுல்லை வாயிலிதுவே.'
(சம்பந்தர்)
-கயேந்திரனைக்
காயலுறாதன்று வந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலினோங்கு மணி விளக்கே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. முல்லைவன நாதர் திருக்கோயில்
திருமுல்லைவாசல் - அங்சல் - சீர்காழி (வழி)
சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் - 609 113
வரதராஜபெருமாள் கோயில்
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
இக்கோயிலில் வரதராஜப்பெருமாள், லோகநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.