மனோரா
தஞ்சாவூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் வங்கக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது மனோரா எனும் நினைவுச் சின்னம். 1814-15இல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் 2ஆம் சரபோஜி கட்டிய நினைவுச் சின்னம் இது. ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இடையே நடந்த கடற்படைப் போரில் இங்கிலாந்தின் நெல்சன் தன் உயிரை பலிகொடுத்து நெப்போலியனைத் தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் சரபோஜி இதைக் கட்டி முடித்தார். அந்த போர் ஸ்பெயினின் கடற்கரைப் பகுதியான டிரஃபால்கர் எனுமிடத்தில் நடந்தது. அந்தப் போரில் 33 கப்பல்கள் கொண்ட இங்கிலாந்து பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கப்பல் படையுடன் போரிட, போரில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருணத்தில் ஒரு பீரங்கிக் குண்டு தாக்கி நெல்சன் வீரமரணம் அடைந்தார். எனினும் அவருடைய இங்கிலாந்து படை வெற்றி பெற்றது. அதன் விவரங்கள் இதோ:
21 அக்டோபர் 1805. இந்த நாள் ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றுதான் வரலாற்றில் மிக முக்கியமான யுத்தம் இங்கிலாந்தின் கடற்படை தளபதி நெல்சன் தலைமையில் இங்கிலாந்தின் கப்பற்படை பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கூட்டுக் கடற்படைகளை ஸ்பெயின் கடற்கரையோரமுள்ள டிரஃபால்கர் எனுமிடத்தில் போரில் வெற்றி கண்ட நாள்.
நெப்போலியன் போனபார்ட் பிரான்சின் மாவீரனாகத் திகழ்ந்தவர். இவரை எதிர்த்து ஆங்கிலக் கடற்படை லார்டு நெல்சன் என்பார் தலைமையில் பலமுறை வெற்றி பெற்றது. நெப்போலியன் பிரான்சின் சார்பில் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர். இங்கிலாந்தின் நெல்சன் அடைந்த கடைசி வெற்றி இந்த டிரபால்கர் யுத்த வெற்றிதான். வரலாற்றில் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் யுத்தம் டிரபால்கர் யுத்தம். ஐரோப்பிய கடல் பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் சொந்தமான 33 கப்பல்களை நெப்போலியன் பார்த்துவிட்டார். இந்த மாபெரும் கப்பல் அணிவகுப்பைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு அவர் அக்டோபர் 21ஆம் தேதி தன்னுடைய 27 கப்பல்களை இரு பிரிவுகளாகப் பிரித்து வீரர்களுக்குத் தன் தலைமை கப்பலில் இருந்து ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். அது வரலாற்றில் பிரபலமாக ஆன வரி அது. “ஒவ்வொரு வீரனும் தன் கடமையைச் செய்ய வேண்டுமென்று இங்கிலாந்து எதிர்பார்க்கிறது” என்பதுதான் அது. (England expects that every man will do his duty)
யுத்தம் தொடங்கியது. ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் எதிரிகளின் கப்பல் படைகளில் 19 முழுவதுமாக அழிக்கப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் கப்பல்கூட சேதமடையவில்லை. ஆனால் பிரிட்டிஷ் கடற்படை வீரர்களில் 1500 பேர் யுத்தத்தில் காயமடைந்தோ அல்லது மாண்டு போனார்கள். வெற்றி கட்டத்தை அடையும் நேரத்தில் யுத்தம் கடுமையாக நடந்தது. பிரெஞ்சுக்காரர்களின் பீரங்கிக் குண்டுகளின் துண்டுகள் நெல்சனின் தோள்பட்டையிலும் மார்பிலும் பாய்ந்தன. உடனடியாக அவரைக் கப்பலின் கீழ்த்தளத்துக்குக் கொண்டு போனார்கள்; அங்கு அரை மணி நேரம் கழித்து போர் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது. அவர் இறக்கும் தருவாயில் தளபதிகள் அவரிடம் தங்கள் படை வெற்றியை நெருங்கிவிட்டது, விரைவில் தங்கள் படை வெற்றியடைந்து விடும் என்று சொன்னார்கள். அதனைக் கேட்டு நெல்சன் சொன்னார்: “இப்போது நாம் திருப்தியடைகிறேன். இறைவன் சித்தம், நான் என் கடமையைச் செய்து விட்டேன்”.
டிரபால்கர் யுத்தத்தின் முடிவில் இனி நெப்போலியனால் இங்கிலாந்தின் மீது படையெடுக்க முடியாது என்கிற நிலைமை உருவானது. நெல்சனை மாவீரனாகவும், இங்கிலாந்தின் மானத்தைக் காப்பாற்றியவராகவும் மக்கள் புகழாரம் சூட்டினார்கள். அவருடைய சவ ஊர்வலம் லண்டனில் உள்ள செயிண்ட் பால் கதீட்ரலில் நடந்தது. பிரம்மாண்டமான அணிவகுப்பு அது. இங்கிலாந்தில் லண்டன் மாநகரின் மத்தியில் ஒரு முக்கியமான இடத்துக்கு “டிரபால்கர் ஸ்கொயர்” (டிரபால்கர் சதுக்கம்) என்று பெயரிடப்பட்டது. அது தவிர இங்கிலாந்து எங்கும் பல தெருக்களுக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகத்தான், பிரிட்டிஷ் விசுவாசியான மன்னர் சரபோஜி நம் தென்னிந்திய கடற்கரையில் மனோரா எனும் கட்டடக் கோட்டையைக் கட்டி நினைவுத் தலமாக உருவாக்கினார்.
இந்த மனோரா கோட்டை எட்டடுக்கு கொண்ட அறுகோண வடிவ கோபுரம். இதன் உயரம் 23 மீட்டர். வங்கக் கடலின் அலைகளுக்கிடையில் கரையில் இந்த கோட்டை பசுமை நிறைந்த கடற்கரையில் நிமிர்ந்து நிற்கிறது. காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அழகான சூழ்நிலை. மனோரா எனும் பெயர் “மினரெட்” எனும் சொல்லில் இருந்து வந்தது. மினரெட் (Minaraet) என்றால் மசூதியின் மெல்லிய உயர்ந்த கோபுரம் அல்லது ஸ்தூபி என்பதாகும். அந்த வடிவத்தில் இது அமைந்திருப்பதால் இதனை “மனோரா” என்றனர்.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஏன், தென்னகத்து சுதேச சமஸ்தானாதிபதிகள் அனைவருமே ஆங்கிலேயர்களின் பக்தர்கள். அவர்கள் வெற்றியை இவர்கள் கொண்டாடுவதும், தோல்விகளைக் கண்டு இவர்கள் துவண்டு போவதும் வழக்கமான செயல்பாடுகள் தான். அப்படிப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் வலிமை மிக்க பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டைத் தோற்கடித்தார்கள் என்றால் தஞ்சை மராத்தியர்களும் அந்த வெற்றியைக் கொண்டாடமல் இருக்க முடியுமா. அவர்களுக்குப் பாராட்டாக, அல்லது நன்றிக்கடனாக இவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு உட்பட்ட இந்த கடற்பகுதியில் இப்படிப்பட்டதொரு கோபுரத்தை நிர்மாணித்தார்கள்.
2004ஆம் வருஷம் அடித்த சுனாமியில் கடற்கரையோரமிருந்த பல இடங்கள் அழிந்து போயின. அப்போது இந்த மனோராவும் சேதமடைந்து போயிற்று. 2007இல் சுற்றுலாத் துறை இந்த நினைவுச் சின்னத்தை சீர்படுத்தி மேம்படுத்தவும், சில அதிகப்படியான வசதிகள், குறிப்பாக பூங்கா, குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவைகளை இங்கே அமைத்திட தீர்மானித்தார்கள். அதன்படி இப்போது மேம்பாடு அடைந்த மனோராவை நீங்கள் பார்க்கிறீர்கள். தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் 1814-15 காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். ஆண்டு 1815. இந்த கட்டடத்தில் மராத்திய மன்னர் வந்தால் வந்து தங்கவும், கடற்கரை ஓரத்தில் ஒரு லைட் ஹவுசாகவும் பயன்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இந்த வீர தீர வெற்றியைக் கொண்டாடும் வாசகங்கள் உள்ளன.
இந்த நினைவுச் சின்னம் இருக்குமிடம் மல்லிப்பட்டினம். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. சரபேந்திரராஜபட்டினம் என்பது. மினார் அல்லது மினரட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் கோபுரம் எனலாம். இந்த கோபுர அமைப்பைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் அதற்கடுத்து அகழியும் அமைந்து ஒரு கோட்டையைப் போல தோற்றமளிக் கிறது. இங்கு வளைந்த மேற்பகுதியுடன் கூடிய ஜன்னல்கள், வட்டமாய் சுற்றி ஏறும் மாடிப்படி, ஒரு தளத்துக்கும் மறு தளத்துக்குமிடையே தாழ்வாரம் ஆகியவை உண்டு.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.