முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா?

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா?
-----------------
எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது.
"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின் ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)
இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).
ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. விஜய் டிவி அதற்கு ஒருபடி மேலே சென்று, "நாயக்குடு' எனும் பெயரை பயன்படுத்தி உள்ளது. இந்தத் தகவல் உண்மை அல்ல.
சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.