முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 19, 2018

மாயவரம் திருக்கோயில்


பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

கோவில் அமைப்பு:
இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி ( குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக் உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.
அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.

இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, .வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.

பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிக்கையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர்.

மயிலாடுதுறை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் விளிக்கப் பட்டுள்ளது. திருமயிலாடுதுறை, மாயூரம், கௌரிமாயூரம், தென்மயிலை, பிரமவனம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம் என பல பெயர்கள் உண்டு மயிலாடுதுறைக்கு. வடமொழியில் உள்ள ஸ்காந்தம், சிவரகசிய மகாஇதிகாசம், துலா காவிரி மகாத்மியம், சிதம்பர புராணம், சிவ புராணங்கள் 10, பிரம்மாண்ட புராணம், ஆக்கினேய புராணம் போன்றவற்றிலும், கந்தபுராணத்திலும், இத்தலப் பெருமை சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:
இந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.