முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

 வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்


கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.
கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.
வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.
அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.
கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.
ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.
இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.
பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.
அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்
தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.
சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.
முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?
எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)
பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)
அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.
டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்
"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"
(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)
"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"
(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)
இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?
அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.