முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியும்!


தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியும்!

·          
தனியார் பள்ளிகள் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் கூட அதிகமாகிவிட்டன. அதிகமான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி தங்களுடைய குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிறார்கள். "மம்மி', "டாடி' என்று குழந்தைகள் அழைத்ததுமே மனம் குளிர்ந்து போகிறார்கள்.
ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுகிறார்கள். நேர்முகத் தேர்வில் கொஞ்சமும் பயம் இன்றி பங்கேற்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் ஆங்கில வழியில் கல்வி பயில்வது அவசியம் என்று சொல்பவர்களுக்கு இந்த பங்கேற்பும், வெற்றியும் எடுத்துக்காட்டுகளாக மாறிவிட்டன.
அரசுப் பள்ளியில், கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களின் நிலை? அவர்கள் இந்தப் போட்டி நிறைந்த உலகில் கடைசி வரிசையில் தன்னம்பிக்கை இல்லாமல் நிற்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசுப் பணிகள், வங்கிப் பணிகள் எதுவாயினும் அவர்களுக்கு அது எட்டாத கனவாகவே இருக்கிறது.
""இப்படிப்பட்ட நிலை மாற வேண்டும் என்பதற்காகவே சென்னை குரோம்பேட்டையில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடெமியைத் துவங்கினேன்'' என்கிறார் ச.வீரபாபு.
""நானும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தேன். 2006 ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வுக்குப் போனேன். ஆனால் அதில் தேர்வாகவில்லை. காரணம், ஆங்கில அறிவு குறைவு. ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவு என்பதால்தான்'' என்கிறார் வீரபாபு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ பயின்றவர் அவர். அவருடைய வயதையொத்தவர்கள் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கைநிறையச் சம்பளம் பெறும் வேலையில் இருக்கும்போது, வீரபாபுவுக்கு அப்படித் தோன்றவில்லை.
""கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதுவது எப்படி என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆங்கில மொழியறிவு இல்லாவிட்டால் அவர்களால் தேர்வு எழுதவும் முடியாது. வெற்றி பெறவும் முடியாது. ஏனெனில் ஐஏஎஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வே ஆங்கிலத்தில்தான் உள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. நகர்ப்புறமோ, கிராமப்புறமோ அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் ஐஏஎஸ் எழுத விரும்பினால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதில் உருவானது தான் 2007 இல் தொடங்கப்பட்ட "தாய்த்தமிழ் ஐஏஎஸ் பயிற்சி மையம்'. பின்னர் அந்தப் பெயர் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடெமி என்று மாற்றப்பட்டது'' என்கிறார் அவர்.
கிராமப்புற மாணவர்களுக்கு உதவ நினைத்ததாகச் சொன்னவர், நகர்ப்புறத்தில் அதுவும் சென்னையில் பயிற்சி மையத்தை ஆரம்பித்தது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும்? என்று யோசித்தோம்.
""ஐஏஎஸ் பயிற்சி என்பது வெறும் படிப்பு சார்ந்தது மட்டுமல்ல. நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்கள் முதலில் அவர்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். புதிய மனிதர்களுடன் பேச, பழக வேண்டும். அதற்கு அவர்கள் நகர்ப்புறத்தை நோக்கி வர வேண்டும். கிராமத்திலேயே பயிற்சி கொடுத்தால் இந்த வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமற் போய்விடும். மேலும் ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் கட்டுரை, விருப்பப் பாடம் மற்றும் பொது அறிவு உட்பட 7 தாள்களைத் தமிழிலேயே எழுத முடியும். ஆனால் மொழி, இலக்கியப் பாடங்களைத் தவிர பிற பாடங்களின் கேள்விகள் எல்லாம் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் இருக்கும். ஆங்கிலக் கேள்விகளைப் புரிந்து கொண்டு தமிழில் எழுதலாம். அதற்குப் பயிற்சி தருவதே என்னுடைய நோக்கம்'' என்கிறார் அவர்.
பல்வேறு துறைசார்ந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தால்தான், மொழிபெயர்க்கப்பட்டிருந்தால்தான், மாணவர்கள் அவற்றைப் படித்து, ஐஏஎஸ் தேர்வு எழுதும்போது பயன் பெற முடியும். அப்படிப்பட்ட நூல்களைத் தேடிப் பிடித்து பயிற்சி மையத்தில் வைத்திருக்கிறார் வீரபாபு.
""அதுமட்டுமல்ல, என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் மத்திய அரசின் பள்ளிப் பாடநூல்களை அடிப்படையாக வைத்துத்தான் ஐஏஎஸ் தேர்வுகளின் கேள்விகள் அமைக்கப்படுகின்றன. எனவே அந்த பாடப்புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறோம். இந்தப் புத்தகங்களைப் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு தயக்கமில்லாமல் தமிழில் பதில் எழுத முடியும். தமிழில் எழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியுமா? என்று மாணவர்கள் இனி பயப்படத் தேவையில்லை. அப்படித் தேர்வு எழுதி ஆர்.பாலகிருஷ்ணன், ராஜேந்திர சோழன், நந்தகுமார், கோபால், ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்'' என்கிறார் வீரபாபு.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.