முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Sunday, November 11, 2018

மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

 கேவர்ஓடையான்...............

யாராவது கொஞ்சம் அசந்து உறங்கிவிட்டால் போதும், உடனே அவர்களை கும்பகர்ணனுடன் ஒப்பிட்டு எள்ளி நகையாடுவார்கள். அவர்கள் தெரிந்துதான் சொல்கிறார்களா அல்லது வெறும் வார்த்தைக்காக அப்படி சொல்கிறார்களா என்று தெரியாது. உங்களை யாரும் அப்படி சொன்னால் வருத்தம் வேண்டாமே... பதிலாக மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
இறைவனுக்கும் அவனிடத்தில் அச்சம் உண்டாயிற்று, இராவணனும் அவன் வீரத்திற்கு அஞ்சுவான். இராமாயண காவியத்தை படிப்பதை விட யாரேனும் சொல்ல கேட்பீர்களா என்றால் தேனினும் தேனாக இனிக்கும். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதி பிடிக்கும், ஆனால் ஒருசிலருக்கு எப்பொழுதுமே ஹீரோவை மட்டுமே பிடிக்கும், அவர் வரும் பகுதிகளை மட்டும்தான் விரும்பி படிப்பார்கள். ஆனால் இராமாயண காவியம் அப்படி அல்ல ஒவ்வொருவரும் தனித்து பெரும் வீரமும், தியாகமும், உடையவர்களாக காணப்படுவார்கள்.
எப்பொழுதுமே கும்பகர்ணனை இறுதியாக போரில் மட்டுமே கண்டு இருப்பார்கள். அவனை பற்றிய செய்திகளை குறைவாகவே கவனித்து இருப்பார்கள்.
இலங்கை மன்னான இராவணேஸ்வரன் பல்லாண்டுகள் தவம் செய்து பெற்ற வரத்தின் பலனாக மமதை கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினான்.
பெரும் வீரமும், புத்திசாலிதனமும் கொண்ட அவனது தம்பியான கும்பகர்ணன் தானும் பல்லாண்டுகள் தவமிருந்து மும்மூர்த்திகளிடமிருந்து வரம் பெற்ற போது தேவர்கள் இவனுடைய ஆற்றலைக் கண்டு அஞ்சி சரஸ்வதியிடம் தஞ்சமடைந்தனர். தேவேந்திரனும், இராவணனை விட பல மடங்கு உருவில் மற்றும் சக்தியில் பெரியவனான கும்பகர்ணன் ஏதாவது வரம் பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி சரஸ்வதியிடம் கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க வேண்டுதல் செய்கின்றான். அவளும் தேவர்களுக்கு அபயமளித்து அவர்களைக் காப்பாற்ற முனைந்தாள். கும்பகர்ணன் முன் தோன்றிய பிரம்மா அவனிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்க அவனோ சாகா வரமான நித்யத்துவம் வேண்டும் என்று கேட்க நினைத்தான். அப்பொழுது சரஸ்வதி அவன் நாக்கில் அமர்ந்து நித்ரத்துவம் வேண்டும் என்று மாற்றி கேட்டுவிட்டான். பிரம்மனும் அப்படியே ஆகட்டும் என்று வரமளித்துச் சென்று விட்டார். அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்கும் பதில் அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் தூங்கினால் எவ்வாறு என்று மன்றாடி ஆறுமாதம் உறக்கம். ஆறு மாதம் விழிப்பு என்று அந்த வரம் மாற்றப்பட்டது, ஏனோ அவன் வேண்டாத நேரம் சரஸ்வதி அவன் நாவில் நாட்டியம் ஆடி அவன் நிலைய அவன் அறியாமலேயே மாற்றி எழுதிவிட்டால்.
இப்படி வீரமும் , விவேகமும் பொருந்திய அம்மாவீரன், மிகவும் நல்லவன். இராவணன் சீதையை கவர்ந்து வந்து சிறை வைத்திருக்கும் பொழுது, அரச சபையில் அனைவருக்கும் முன்பு அண்ணன் என்று கூட பாராமல் நல்லதை எடுத்துரைப்பான். இதோ கம்பரின் வரிகளில்....
"ஆசில்பர தாரமவை அஞ்சிறைஅ டைப்போம்
மாசில்புகழ் காதலுறு வேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் "
இதில் கும்பகர்ணன், அண்ணன் இராவணனிடம் அவையில் எடுத்துரைக்கும் அந்த பாடலின் விளக்கம்.
இராவனேஸ்வரா, அதாவது நமது மொழியில் அடேய் அண்ணா...... அடுத்தவனின் கற்புப் பிறழாத மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைப்போம், ஆனால் நாம் மட்டும் அற்ப புகழை எதிர்பார்ப்போம், அப்பெண்ணை மானத்துடன் விளையாடுவோம், ஆனால் நாம் மட்டும் மானத்தைப் பற்றி பேசுவோம், எம்பெருமானின் அருளை அடைய காமத்தை அடக்கியாண்ட நாம் காமத்திற்கு அடிமையாவோம், சாதாரண மானுடர்களை இழிந்தவர் என்போம், ஆனால் நாம் மட்டும் மானிடப் பெண்டிரை நயப்போம், நன்றாக இருக்கிறதுடா....... அடேய் அண்ணா, நம்முடைய வெற்றி பொருந்திய அரசாட்சி.....
என்று அரசவையில் துணிந்து நையாண்டி செய்கிறான். இது இராவணனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று, எல்லா காலங்களிலும் சராசரி மனிதனின் அடிமனத்தில் நிலவும் தகாத காம உணர்வைத் திருத்தி நெறிப்படுத்தத் தக்கதாகவும் உள்ள சொற்றொடர்...ஒலிநயமும் இனியதாக உள்ளது அல்லவா.. அதுதான் கம்பர்.. சடையப்பரின் ஸ்பான்சர்சிப் வீணாகவில்லை அல்லவா.
இத்தனை பெருமை வாய்ந்த அந்த கும்பகர்ணனுடன் உங்களை ஒப்பிட்டால் வருத்தம் வேண்டாம், மாறாக மகிழ்ச்சி அடையுங்கள்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.